Saturday, November 26, 2011

கேடில் விழுச் செல்வம்

கொடுக்க கொடுக்க குறையாத செல்வம் கல்வியும் அன்பும் மட்டுமே. இந்தச் செல்வத்தை பெறுபவர் மட்டும் நிறைவடைவதில்லை; கொடுப்பவரும்தான். இவை இரண்டும் ஒருவருக்கு சரியான நேரத்தில் தேவையான அளவுக்கூட கிடைக்காவிட்டால் அது இந்தச் சமுதாயத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய கேட்டை விளைவித்து விடுகிறது.

அறிவின் மூலதனமான கல்வி இன்றைக்கு பணத்தின் அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டது. கல்வியும் பொருளுக்கு மட்டுமே கிடைக்கும் வியாபாரப் பொருளாகிவிட்டது.

ஆனால் கல்வியை சேவையாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு செய்து கல்விக்கும் சேவை செய்பவர்கள் பலர் இங்கே இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் திரு. இருளன்.

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தை அடுத்து உள்ளது ஒரு சிறிய கிராமம். பெயர் மீனாட்சிபட்டி. இந்தக் கிராமத்தில் இதுவரைக்கும் 200க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் பெறாமல் இலவசமாக தனிப்பயிற்சி (TUITION) கொடுத்து வந்துள்ளார். தற்சமயம் 110 பிள்ளைகள் இவரிடம் பயன் பெற்று வருகிறார்கள்.

திரு. இருளன் தன்னுடைய ஒரு வயதில் தன் தந்தையை இழந்துவிட்டார். பசிப்பவருக்கு உணவின் மீது எவ்வளவு ஏக்கம் இருக்குமோ அதுப்போலவே படிக்க விரும்புபவர்களுக்கு அதைப் பெற முடியாமல் போகும் போது ஏக்கம் ஏற்படும்.

படிப்பின் மீது மிகுதியான நாட்டம் இருந்தும் தன் படிப்பு செலவுக்கு பணமில்லாமல், உதவுவதற்கு யாருமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு பள்ளியில் சேர்ந்து படித்து உள்ளார். ஒரு நோட்டு வாங்குவதற்குக் கூட முடியாமல் பிறரை எதிர்ப்பார்க்க வேண்டிய சூழல்தான் அன்று அவருக்கு இருந்தது.

திரு. இருளன் அவர்கள் இன்றைக்கு எம்ஃபில் (M.Phil) முடித்துவிட்டு மெரையன் பயாலாஜியில் பி.எச்.டி (PhD in Marine Biology) செய்து கொண்டிருக்கிறார்.

கல்விக்காக தான் ஏங்கியது போல் தன் கிராமத்துப் பிள்ளைகள் ஏங்கக் கூடாது என்று மனதில் உறுதி பூண்டு தன்னுடைய இந்தச் சேவையை 2004-ம் வருடம் முதல் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தன்னுடைய எட்டாவது வயதில் இருந்து தற்காப்புக் கலையை (Martial Art) பயின்று வந்துள்ளார். ஆர்வம் மிக்க மாணவ மாணவியர்களுக்கு இக்கலையையும் இலவசமாக சொல்லிக் கொடுத்து வருகிறார்.

தேசிய அளவில் நடக்கின்ற போட்டிகளுக்கு இதுவரை தன் சொந்த செலவில் 50 பிள்ளைகளை அனுப்பி வெற்றி பெறச் செய்துள்ளார்.

கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றவை எவை


In English,

Learning is wealth none could destroy
nothing else could gives genuine joy.

மேலும் தகவலுக்கு: 9942241826

புகைப் படங்களுக்கு கீழ்காணும் இணைய தள முகவரியை சொடுக்கவும் http://www.blacfoundation.org/photos/mv/index.html