Sunday, February 19, 2012

மனிதருள் மாணிக்கம்


1992 ஆம் ஆண்டு சென்னை இராயபுரத்தில் உள்ள நிர்மலா சிசுபவனிற்கு அன்னை தெரஸா அவர்கள் வருகை புரிந்து இருந்தார்கள். அங்கே வந்திருந்தவர்களை அன்னை ஆசிர்வதித்துக் கொண்டே சென்றார்கள். ஆனால், அன்னை குன்னூரில் இருந்து தன்னைக் காண வந்திருந்த ஒரு பெண்மணியை மட்டும் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து மும்முறை ஆசிர்வதித்தார்கள்.  அந்தப் பெண்மணிக்கே அது ஆச்சரியமாக இருந்தது. ஏன் அன்னை தன்னை மட்டும் மும்முறை ஆசிர்வதித்தார்கள் என்று.

அந்தப் பெண்மணி பின்னாளில் தன்னலமில்லாத சேவையை இந்தச் சமுதாயத்திற்கு செய்யப் போகிறார் என்று அன்னை அறிந்திருப்பார் போலும்.

நாம் மேலே ஆசிர்வதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பெண்மணியின் பெயர் இந்திரா. குன்னூரில் பாய்ஸ் கம்பெனி என்னும் இடத்தில் வசித்து வருகிறார். குன்னூரை சுற்றி அவர் செய்துவரும் சேவை மிகவும் மகத்தானது.

இயல்பாகவே சேவை மனப்பான்மை உள்ளவர் திருமதி இந்திரா அவர்கள். ஆரம்பத்தில் இவர் தன்னால் இயன்ற பொதுச் சேவையையும் மனநலம் குன்றிய பிள்ளைகளை பராமரிப்பதிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அவரால் சரியாக சேவை பணியில் ஈடுபட முடியாமல் போனது.

1996ஆம் ஆண்டில் அவர்கள் தன்னுடைய முதல் குழந்தையை கருவில் சுமந்திருந்தார்கள். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் பெங்களூருக்கு காரில் சென்ற போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் கருவில் இருந்த சிசுவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. பின்னாளில் அவரது சேவையை வீட்டிலிருந்தே துவங்க வேண்டுமென்று இறைவன் நினைத்திருப்பாரோ என்னவோ!.

ஆம். அந்தப் பெண் குழந்தையை அவர்கள் பெற்றெடுத்தப் போது வெறும் 600 கிராம் மட்டுமே இருந்தது. அதோடு அல்லாமல் அக்குழந்தையின் முளை வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. திருமதி இந்திரா அவர்கள் அந்தக் குழந்தைக்காக எந்தவிதமான வருத்தமும் கொள்ளாமல் மற்ற ஆரோக்கியமான குழந்தைகளைப் போலவே பராமரித்து வந்தார்கள். இதற்கிடையில் அவர்கள் இரண்டாவதாக ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தார்கள். 

அந்தக் காலகட்டத்தில் மனவளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்காக சிறப்பு பயிற்சியை ’நேஷ்னல் டிரஸ்ட்’ என்கிற நிறுவனம் குன்னூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு இடத்தில் நடத்தி வந்தது.  இதை அறிந்த திருமதி. இந்திரா அவர்கள் தன் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இந்தப் பயிற்சியை மேற்கொண்டார்கள். அந்தப் பயிற்சி துணையாகக் கொண்டு தன்னுடைய பெண் குழந்தை வளர்த்து வந்தார்.

அப்போதுதான் அவர்களுக்கு இயல்பாகவே இருந்த சேவை மனப்பான்மை முழுமையாக விழிப்பு கொண்டது.  நம் பெண் குழந்தைப் போல இருக்கின்ற குழந்தைகளை நாம் கவனித்துக் கொள்வது போல் அவர்களது பெற்றோர்களும் கவனித்துக் கொள்கிறார்களா என்று ஐயம் எழுந்தது.

குன்னூர் மலைப்பிரதேசம் ஆனபடியால் திருமதி. இந்திரா எங்கேயும் கால் நடையாகவேதான் செல்வார்கள். அப்படி நடந்து நடந்தே மனநலம் குன்றிய பல குழந்தைகளை கண்டறிந்திருக்கிறார்.

ஆனால், அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் ஜடப்பொருளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட அக்குழந்தைகளுக்கு வழங்காததை கண்டு மனம் வருந்தி கலங்கியிருக்கிறார்.

சில குழந்தைகளை கால் மிதிக்கும் சாக்கின் மீது கூட போட்டு வைத்திருப்பதை கண்டிருக்கிறார்கள். குளிப்பாட்டாமல், பல் தேய்க்காமல், நல்ல உடைகள் உடுத்தப்படாமல் பெற்றோர்களின் அறியாமையினாலும் ஏழ்மையினாலும் குப்பையோடு குப்பையாக அந்தக் குழந்தைகள் வாழ்ந்துக் கொண்டிருப்பதை கண்டு நெகிழ்ந்திருக்கிறார்.

தான் அந்தக் குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக கூறிய போது ”உனக்கேன் இந்த வீண் வேலை” என்று பல பெற்றோர்கள் இவரிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

ஆனாலும் விடப்பிடியாக அவர்கள் மனதை கரைத்து தான் பயிற்சியின் மூலம் கற்றவைகளையும் தன் இயல்பான சேவை மனவுணர்வுடனும் அக்குழந்தைகளை பராமரிக்க ஆரம்பித்தார் திருமதி. இந்திரா அவர்கள்.

இதுவரை 160 மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு தன் சேவையை வழங்கி வந்துள்ளார். மேலும் 8 மனநலம் குன்றிய குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு தேவையான எல்லாவிதமான உதவிகளையும் வழங்கியுள்ளார்.

வருடம் ஒருமுறை ஒரு விழா நாளில் தன்னுடைய அத்தனை குழந்தைகளையும் வரைவழைத்து அவர்கள் தேவையானவற்றை (ஆடை, பொம்மைகள், காலணிகள் இத்யாதிகள்) தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்கள்.

இதற்கு தேவைப்படும் நிதியை இவர் எப்படி திரட்டுகிறார் என்பதை அறிந்தால் அவரது சேவை மனப்பான்மை எப்படிப்பட்டது என்று புரியும்.

தன்னுடைய ஓய்வு நேரங்களில் சிறியதும் பெரியதுமாக பேப்பர் பேக்குகள் செய்து அதை மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் பேன்ஸி ஸ்டோர்ஸ்களிலும் விற்பனை செய்து அதில் வரும் தொகையை அப்படியே சேமித்து வைத்து பின் மேலே சொன்ன விழாவை வருடம் ஒருமுறை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக ‘கார்னர் ஸ்டோன் அறக்கட்டளை’ என்கிற நிறுவனத்தின் கீழ் இவர் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு சேவையாற்றி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு இவரை பற்றிய செய்தி ‘புதிய தலைமுறை’ இதழில் வந்துள்ளது.

ஜெயா டிவியில் விசுவின் ‘மக்கள் அரங்கத்தில்’ பேச இவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

ஆட்டோ ஓட்டுனரான தன் கணவர் தன்னுடைய சேவைக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார் திருமதி. இந்திரா.

இவருடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு கடைசியாக வாழ்த்தும் நன்றியும் தெரிவித்த போது தான் மிகச் சாதாரணமானவள் என்றும் மேலும் தன்னை தாழ்த்திக் கொள்வதுப் போல் தான் ஒரு குப்பை என்றும் உரைத்தார்கள்.

இவர் குப்பை இல்லை. மாணிக்கம். மனிதருள் மாணிக்கம்..

மேலும் தகவலுக்கு:

திருமதி. இந்திரா, குன்னூர்.
அலைபேசி எண்: 9751128499