Sunday, December 11, 2011

பாலம்

மதுரை மத்திய சிறைச்சாலை. அதன் பக்கத்தில் ஒரு பள்ளி. அந்தச் சிறுவன் அப்பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தான்.

தினமும் சிறைச்சாலையை கடந்துதான் அவன் பள்ளிக்கு செல்ல வேண்டும். அப்படி செல்கையில் அங்கே தண்டனைக்காக கைது செய்து கொண்டு வரப்படுபவர்களையும், விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களையும் ஜாமினுக்காக அலைபவர்களையும் மற்றும் உள்ளே உள்ள தண்டனைக் கைதிகளை சந்திப்பதற்காக வந்திருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் அவன் கவனித்துக் கொண்டே செல்வான்.

குறிப்பாக, தண்டனைக்காக கைது செய்து கொண்டு வரப்படும் கைதிகளின் இறுகிய முகத்தையும் விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகளின் இறுகிய முகத்தையும் கூடவே சென்று பார்ப்பான்.

என்ன குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பார்கள்? குற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும்? கோபத்தின் வெறுப்பின் உச்சநிலையில் மனம் தடுமாறி செயல்பட்டிருக்கலாமோ? அல்லது குடிபோதையில்...? இவர்களின் பிள்ளைகள், மனைவிமார்கள் உறவுகள் இதனால் எப்படி பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? சமூகத்தில் அவர்களது நிலை என்ன? என்றெல்லாம் அவன் சிந்திப்பான்.

சிறைச்சாலை வாசலில் நின்றிருக்கும் பெண்களின், குழந்தைகளின், பெற்றோர்களின் உறவினர்களின் வேதனையை அவர்களின் முகத்தைக் கண்டே உணர்ந்து கொள்வான். அவர்களின் வேதனையை தன் வேதனையாக கொண்டு ஏதும் செய்ய அறியாது தவிப்பான். எப்படி செய்வது என்று தெரியாத அப்பருவத்தில் இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமே என்று மனதில் கவலைக் கொள்வான்.

வாழ்க்கைக்காக பள்ளியில் அவன் பாடப் புத்தகங்களைப் படித்தான். வாழ்க்கையைப் படிப்பதற்காக இந்த வேதனைகளைப் பாடங்களாக படித்தான்.

கிட்டத்தட்ட தன்னுடைய பதினாலாவது (14) வயது முதல் முப்பத்தி ஒன்றாவது (31) வயது வரை இதை அவன் கற்றுக் கொண்டே வந்தான்.

சரியாக முப்பத்திரண்டாவது (32) வயதில், 1991-ம் வருடத்தின் துவக்கத்தில் தன்னுடைய சிறைச்சாலை சேவையை துவக்கினார் பெரியவனாக ஆன அந்தச் சிறுவன். அவர் பெயர் திரு. இருதயராஜ்.

தினமும் காலை 7.30 மணிக்கு மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சென்று விடுவார். உள்ளிருக்கும் கைதிகளை சந்திக்க அங்கே வரும் கைதிகளின் உறவினர்களுக்கு தேவையான எழுத்துப் பூர்வமான உதவிகளைச் செய்வார். 8.30 மணிக்கு மேல் இலவச நேர்காணலுக்கான ஏற்பாடுகளை செய்வார். சிறைவாசிகளை சந்திக்க வந்திருக்கும் உறவினர்களின் நண்பர்களின் செல்போன்களை பாதுகாக்கும் பணியை செய்வார்.

சிறை அதிகாரிகளின் சிறப்பு அனுமதியின் பேரில் உள்ளே சென்று வெளியில் சந்திக்க முடியாமல் தவிக்கும் அவர்களது உறவினர்களின் செய்திகளை சிறைவாசிகளிடம் தெரிவிப்பார். இதன் மூலம் சிறைவாசிகளுக்கும் அவர்களது உறவுகளுக்கும் நண்பர்களுக்குமிடையே ஒரு இணைப்பு பாலமாக விளங்கினார்.

கோபத்தையும் வெறுப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் கண நேரத்தில் தவறிழைத்துவிட்டு சிறைக்குள் வந்து தன் குடும்பத்தாரின் நிலையையும் தன் நிலையையும் நினைத்து வருந்தி அழுபவர்களைத் தன்னுடைய அன்பான பேச்சினாலும், மென்மையான அணைப்பினாலும், துயரமாக வழிந்தோடும் அவர்களின் கண்ணீரைத் துடைத்தும் அவர் ஆதரவளித்தார்.

இது மட்டுமல்லாது சிறைவாசிகளின் குழந்தைகளின் நிலையை உணர்ந்து அவர்களுக்காக என்ன செய்வது என்று யோசித்து திரு. இருதயராஜ் மதுரையில் ஆரம்பித்ததுதான் “ABODE PRECIOUS CHILDREN HOME”.

சிறைவாசிகளின் குழந்தைகளின் வாழ்வு மேம்படவும் மென்மைபடவும் இது நடத்தப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. அவர்கள் மனதில் உள்ள குற்ற உணர்ச்சியை, முரட்டுத்தனத்தை போக்கவும், சமூகத்தில் எல்லோருடனும் சரி சமமாக பழகவும், பாதுகாப்பு உணர்வுடன் வாழவும் அவர்களுக்கு தேவையான போதனைகளை, வாழ்வியல் தேவைகளை திரு. இருதயராஜ் அவர்கள் வழங்கி அவர்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்.

சிறையில் ஒரு சம்பவம்.

உலகத்தின் மீதும் தன் மீதுமான வெறுப்பினால் ஒரு சிறைவாசி அங்கே யாருடனும் பழகாமல் பேசாமல் மிகவும் தனித்திருந்தார். சிறைக்குள் மற்றொரு தண்டனையாக தன் மனச்சிறைக்குள் தன்னை இருத்திக் கொண்டிருந்தார்.

அந்த நாளில் திரு. இருதயராஜ் அவர்கள் அப்போதைய முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதியிருந்தார். அதன் நகலை சிறைக்குள் நடந்த ஒரு விழாவின் போது வாசித்தார். அந்த வார்த்தைகள் விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்த மேற்கூறிய அந்த சிறைவாசியின் காதுகளில் விழுந்தது. அது அவரது மனதைப் புரிந்து எழுதப்பட்டதாகவும் அதற்கு ஆறுதல் அளிப்பதாகவும் உணர்ந்து கண்ணீர் விட்டு அழுது அப்படியே ஆழ்ந்து உறங்கிவிட்டிருக்கிறார்.

மறுநாள் திரு. இருதயராஜ் அவர்களிடம் அந்த சிறைவாசி தன்னுடைய மன இறுக்கத்தில் இருந்து தான் விடுபட்டதாகவும், வெகு நாட்களுக்குப் பிறகு நன்கு ஓய்வாக உறங்கியதாகவும் தெரிவித்து அவருக்கு நன்றி பாராட்டி உள்ளார். அதிலிருந்து அந்தச் சிறைவாசி மற்றவர்களோடு இயல்பாக பழக ஆரம்பித்தார்.

தனக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையிலும் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் தள்ளி தன்னுடைய சேவைப் பணிகளை விடாமல் செய்து வந்தார். அப்படியிருந்தும் அவருக்கும் ஒரு சோதனை வந்தது.

வருடம் 2008-2009 இடைவெளியில், திரு. இருதயராஜ் அவர்கள் சிறை ஊழியர்களில் / சிறை அதிகாரிகளில் சிலர் ஊழல் செய்வதை கண்டித்துள்ளார். இதைப் பொறுக்காதவர்கள் அவர் மேல் சில வீண் பழிகளைப் போட்டு தகாத சம்பவங்களை அரங்கேற்றினார்கள். (இவை பற்றி செய்திகள் அப்போதைய குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ளதாக தெரிவித்தார்).

பின் அவரை ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அவரை விடுவித்தார் குற்றம் இழைத்த அதிகாரி.

மனம் உளைச்சலினால் திரு இருதயராஜ் அவர்கள் சிறைச்சாலை சேவைகளை மட்டும் நிறுத்தி விட்டார்.

ஆனால் “ABODE PRECIOUS CHILDREN HOME” பணிகளை தன்னுடைய சிறுநீரக / இதய நோய்களை புறந்தள்ளி சீரிய முறையில் நடத்திக் கொண்டு வருகின்றார்.

சமுதாயத்தின் மீதும் சமுதாயத்தின் ஒரு பகுதியினரால் புறக்கணிக்கப்படும் குழந்தைகளின் மீதும் அக்கறை உள்ளவர்கள் செய்யும் உதவிகளை மட்டுமே கொண்டு இந்தத் தொண்டு நிறுவனம் திரு. இருதயராஜ் அவர்களால் நடத்தப்படுகின்றது.

மேலும் தகவலுக்கு: திரு. இருதயாஜ் - 9842193428

No comments:

Post a Comment