Wednesday, October 12, 2011

தவிப்பு

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரத்தில் ஒரு காலணிக் கடை. பெயர் ‘மஸ்தான் ஃபுட் வேர்’. அதன் முதலாளியின் பெயர் மஸ்தான். தன்னுடைய சிறிய வயதில் இருந்து சில மாதங்கள் முன்பு வரைக்கும் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து உண்டு அங்கேயே உறங்கி வாழ்ந்து வந்தவன்தான் இந்த மஸ்தான்.

எப்படி இவன் வாழ்க்கையில் திடீரென்று இந்த அதிசயம் நடந்தது. எந்தக் கடவுள் இறங்கி வந்து இவன் வாழ்க்கையை இப்படி மாற்றிப் போட்டார்.

இதற்காக எல்லாம் கடவுள் இறங்கி வரத் தேவையில்லை. சாதாரண மனிதர்களாகிய நாமே இதைச் செய்துவிட முடியும் என்று சாதித்துக் காட்டிக் கொண்டிருப்பவர்தான் கோவை நகரத்தில் வசித்து வரும், வெறும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த திரு. காஜாமொய்தீன் அவர்கள்.

திரு. காஜாமொய்தீன் அவர்கள் மஸ்தானின் வாழ்க்கையை மாற்றி அமைத்த பின்னணியைச் சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

மஸ்தானின் இளம் பருவத்தில் அவனை போலியோ நோய் தாக்கியது. அதற்குரிய மருத்துவச் சிகிச்சை அவனுக்கு சரியான நேரத்தில் சரியானபடி கிடைக்காததால் அவனுடைய கால்கள் சூம்பி செயலற்றுவிட்டது. எந்தவிதமான ஆதரவும் இல்லாததால் அவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானான். அதையே தன் வாழ்வின் ஆதாரமாக ஆக்கிக் கொண்டான். தாராபுரம் பேருந்து நிலையத்திலும் சுற்றுப்பட்ட இடங்களிலும் பிச்சை எடுப்பதும் உண்பதும் அங்கேயே எங்காவது உறங்குவதுமாக வாழ்க்கையை நடத்தி வந்தான்.

ஒரு நாள் அப்படி உறங்கிக் கிடந்த போது, கவனக் குறைவாக காரை ஓட்டி வந்த ஒருவன் ஏற்கனவே வலிவு இல்லாத அவனது கால்கள் மேல் ஏற்றி எலும்புகளை நொறுக்கிவிட்டு நிற்காமல் போய்விட்டார். வலியால் துடித்துக் கொண்டிருந்த மஸ்தானை அங்கிருந்த சிலர் கோயம்புத்தூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள்.

நான்கு நாட்கள் கழித்துதான் இந்தத் தகவல் திரு. காஜாமொய்தீன் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. அவர் உடனடியாக கோயம்புத்தூர் பொது மருத்துவமனைக்கு சென்று மஸ்தானைக் கண்டறிந்தார். நான்கு நாட்களாக அவனுக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கப்படாமல் இருப்பதைக் தெரிந்துக் கொண்டார். மஸ்தானிடம் பேசியதில் அவனிடம் ஊனமுற்றோர் அடையாள அட்டை இருப்பதை அறிந்து கொண்டார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்குமாறு உரியவர்களிடம் அவர் விண்ணப்பித்துள்ளார். அந்தக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெற வேண்டிய சலுகைகளைப் பெற்றிட விரைவான நடவடிக்கைகளை திரு. காஜாமொய்தீன் அவர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களும் மேற்கொண்டனர்.

மஸ்தானுக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் இருந்த இருபத்தியொரு நாட்களும் மஸ்தானுக்கு தான் தனி மனிதன் அல்ல என்ற உணர்வை வரவழைக்கும் விதமாக திரு. காஜாமொய்தீனும் அவரது சேவைக்கு உறுதுணையாக உள்ளவர்களும் தினமும் ஒருவர் விட்டு ஒருவராக பழங்களோ, பிஸ்கெட்டு பாக்கெட்டுகளோ வாங்கிக் கொண்டு போய் கொடுத்து பேசிவிட்டு வந்தார்கள்.

இதற்கிடையில் மஸ்தானுக்கு ஏற்பட்டது விபத்து என்பதால் அதைப் போலீஸ் துறையும் முறைப்படி விசாரித்துக் கொண்டிருந்தது. விசாரணையில் இந்த விபத்துக் காரணமானவரும் அவரின் முகவரியும் போலீஸுக்குக் கிடைத்தது. இதை அறிந்த திரு. காஜாமொய்தீன் அவர்கள் போலீஸ் துறையினரை நாடி அவர்களிடம் இருந்து அந்த முகவரியைப் பெற்றுக் கொண்டார்.

விபத்துக் காரணமான அந்த நபரிடம் திரு. காஜாமொய்தீன் அவர்கள் பேசி, இந்த விபத்தினால் ஏற்பட்ட விளைவுகளை / பாதிப்பை அவருக்கு உணர்த்தினார். தன் தவறை உணர்ந்த அந்த நபர் தன்னால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக வழங்குவதாக உறுதி தந்தார்.

டிஸ்சார்ஜ் நாளன்று திரு. காஜாமொய்தீன் அவர்கள் மஸ்தானிடம் அடுத்து நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார். அவன் வழக்கம் போல் பிச்சை எடுக்கப் போவதாகவும் தனக்கு அதற்கு மேல் எதுவும் தெரியாது என்றும் கூறினான்.

’நீ என்னிடம் வராமல் போயிருந்தால் நீ என்ன செய்யப் போகிறாய் என்பது பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் நீ என்னிடம் வந்துவிட்டாய். உன்னை பழையபடி பிச்சை எடுக்கவிட மாட்டேன்’ என்று மஸ்தானிடம் திரு. காஜா மொய்தீன் உறுதியாக கூறினார். உனக்கு நான் ஒரு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தால் அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறாயா? என்று மீண்டும் அவனிடம் கேட்டார். அவன் சரி என்றான்.

ஏற்கனவே உறுதி அளித்திருந்த அந்த விபத்தை ஏற்படுத்திய நபரிடம், இதற்கான செலவுகளை ஏற்கும்படி திரு. காஜாமொய்தீன் அவர்கள் கேட்டார். அவரும் அதற்கான தொகையை முழுமையாக கொடுத்தார்.

பின் தாராபுரத்திலேயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அங்கு மஸ்தானுக்கு அவன் பெயரிலேயே ஒரு காலணிக் கடை வைத்துக் கொடுத்து அவன் வாழ்க்கை விதியையே மாற்றிவிட்டார் தன்னலமில்லாது சேவை செய்து வரும் திரு. காஜாமொய்தீன் அவர்கள்.

இதுதான் மஸ்தான் என்ற பிச்சைக்காரன் ஒரு காலணிக் கடை முதலாளியான விதம்.

இந்த நிஜத்தின் பின்னால் இருக்கும் திரு. காஜாமொய்தீன் அவர்களுக்கு ஒரு தம்பி இருந்தார். அவருக்கு 1990-ம் வருடம் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது போதிய பண வசதி அவரிடம் இல்லை. தம்பிக்கு மருத்துவச் சிகிச்சைப் பெற தவியாய் தவித்தார். தேவையான மருத்துவ உதவியைப் பெற முடியாமலும், அதைப் பெறுவதற்கு சரியான வழிகாட்டுதல்களோ, நபர்களோ இல்லாமையால் தன் தம்பியை இழந்தார்.

அப்போது ஏற்பட்ட மனவேதனை / தவிப்பு அவரை வேறுவிதமாக சிந்திக்க வைத்துள்ளது. நாம் ஏன் இதைப் பற்றித் தெரிந்துக் கொள்ளக்கூடாது. மருத்துவ உதவிகளை நம் போன்றவர்கள் பெற என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசித்தார்.

அப்பொழுது அவர் மனதில் தோன்றியதுதான் ‘ஒரு ரூபாயில் ஒரு உயிர்’. அதாவது ஒவ்வொரு நபரிடமும் ஒரு ரூபாய் பெறுவது. அதைக் கொண்டு தேவையானவர்களுக்கு முடிந்த அளவிற்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பது என்பதே அது.

பலரை அனுகினார். உதவிகள் கேட்டார். சிலர் கொடுத்தனர். பலர் மறுத்தனர். ஆயினும் மனம் தளராமல் சேவையை நடத்தி வந்தார்.

கடந்த இருபது வருடங்களாக இந்தச் சேவையை எந்தவிதமான எதிரிப்பார்ப்பும் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் அமைதியாக செய்து கொண்டிருக்கிறார். இவரால் மருத்துவ உதவி பெற்றவர்களின் வாய்மொழியாகவே இவரைப் பற்றிய சேதி பல நல்ல உள்ளங்களையும், மருத்துவ உதவிக்காக தவிப்பவர்களையும் சென்றடைந்தது. இவரால் பலர் இருதய, கிட்னி, எலும்பு முறிவு என்று இன்னும் பலவிதமான அறுவை சிகிச்சைகளைப் பெற்று உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலே வெறும் நான்காம் வகுப்பு வரைப் படித்த திரு. காஜாமொய்தீன் அவர்களை ஆங்கிலம் உட்பட பல மொழிகளை பேசவும் எழுதவும் செய்துவிட்டது.

இதுவரையில் அவர் 900-க்கும் அதிகமான பேர்களுக்கு ‘ஒரு ரூபாயில் ஒரு உயிர்’ மூலம் மேலே குறிப்பிட்டபடி பல மருத்துவ நல உதவிகளைச் செய்துள்ளார்.

இந்த மருத்துவ உதவிகளுக்கு தேவையான பண உதவிகளை பெறுவது சம்பந்தமாக கேட்டபோது அவர் கடைசியாக ஒரு வாசகம் சொன்னார்:

‘இறைவன் எந்தப் பறவைக்கும் இரையை அதன் கூட்டில் சென்று கொடுப்பதில்லை. ஆனால், அதற்கான வலிமையைக் கொடுக்கிறான். அந்தப் பறவைதான் தனக்கான இரையைத் தேடி எடுத்துக் கொள்கிறது’.

திரு. காஜாமொய்தீனின் செல்பேசி எண்: 9597693060.

No comments:

Post a Comment